செவ்வாய், 11 டிசம்பர், 2012

தண்ணீர்ப் பிரச்சனை


தண்ணீர்ப் பிரச்சனை
நீரின்றி அமையாது உலகு என்பது முதுமொழி
             மனிதனுக்கு மட்டுமின்றி பிற உயிரினங்களுக்கும் மிக முக்கியமான வாழ்வாதாரம் தண்ணீர். பூமியின் செழிப்புக்கு, உணவு உற்பத்திக்கு என்று எல்லாவற்றுக்கும், தண்ணீர் அடிப்படை என்பதால்தான் தண்ணீர்த் தேவையை சுலபமாக நிறைவேற்ற அல்லாஹ் வழிவகை செய்திருக்கிறான்.
            பூமியின் மொத்த பரப்பளவில் 71٪  தண்ணீர் ஏன்?
             குளிக்க, குடிக்க,சமைக்க, துவைக்க, விவசாயம் செய்ய என்று மனிதனின் தவிர்க்க முடியாத தேவையாக தண்ணீர் இருப்பதால் இறைவன் செய்த ஏற்பாடு அது.
              கடல்,ஆறு, ஏரி போன்ற வற்றிலிருந்து தண்ணீர், தண்ணீர் திரவ நிலையிலிருந்து நீராவிக்கு மாறி காற்றில் கலந்து மேலே சென்று பின்பு மேகங்களை உருவாக்குகிறது. இதை நீர் சுழற்சி என்பர்.

أَوَلَمْ يَرَوْا أَنَّا نَسُوقُ الْمَاءَ إِلَى الْأَرْضِ الْجُرُزِ فَنُخْرِجُ بِهِ زَرْعًا تَأْكُلُ مِنْهُ أَنْعَامُهُمْ وَأَنفُسُهُمْ  ۖ أَفَلَا يُبْصِرُونَ
அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா - நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக்கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம்; அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா? 32:27
وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُّبَارَكًا فَأَنبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ
 அன்றியும், வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ள தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம். 50:9
  وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُم مَّاءً فُرَاتًا
அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம். 77:27

            அல்லாஹ்வின் இந்த அற்புத ஏற்பாட்டால் கிடைக்கும் தண்ணீரை சுமூகமாக பங்கிட்டு பயன் படுத்த மனிதனால் முடியவில்லை. தண்ணீர்ப் பிரச்சனையால் அண்டை மாநிலங்கள் சண்டை மாநிலங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. அண்டை வீட்டான் பசியில் வாட தான் மட்டும் வயிறு நிரப்புபவன் உண்மை விசுவாசியல்ல எனும் இறைத்தூதர் )ஸல் (அவர்களின் வாக்கு உணவுக்கு மட்டுமல்ல தண்ணீருக்கும்தான். பக்கத்து வீட்டுக்கு மட்டுமல்ல பக்கத்து காட்டுக்கும்தான் நாட்டுக்கும்தான்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
மூன்று பேர்களுடன் மறுமையில் அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான் (அவர்கள் வருமாறு:) (ஒருவன், தன் பொருளை (அதிக விலைக்கு) விற்பதற்காக (அதைக் கொள்முதல் செய்த போது) வாடிக்கையாளர் கொடுக்கும் விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கியதாக (பொய்) சத்தியம் செய்தவன் ஆவான். மற்றொருவன், அஸர் தொழுகைக்குப் பின் (மக்கள் கூடும் நேரத்தில்) முஸ்லிம் ஒருவரின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய்சத்தியம் செய்தவன் ஆவான். இன்னொருவன், தன் தேவைக்கு மேல் எஞ்சியிருந்த தண்ணீரை (மக்கள் உபயோகிப்பதைத்) தடுத்தவன் ஆவான். (மறுமையில்) அவனை நோக்கி, 'உன் கரங்கள் உருவாக்காத தண்ணீரின் மீதத்தை மக்கள் உபயோகிக்க விடாமல் தடுத்ததைப் போன்றே இன்று நான் என்னுடைய அருளிலிருந்து உன்னைத் தடுக்கிறேன்" என்று அல்லாஹ் கூறுவான். 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'(தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு) தடுத்தால், அதைச் சுற்றியுள்ள) புல் பூண்டுகளை (மேய விடாமல் கால்நடைகளைத்) தடுத்தாகி விடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(
தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்காதீர்கள். (அவ்வாறு தடுத்தால், அப்பகுதியில்) தேவைக்கு மேல் உள்ள புல் பூண்டுகளைத் தடுத்தவராக நீங்கள் ஆகிவிடுவீர்கள்.
இதையும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களே அறிவித்தார்கள்.
           தண்ணீர் தர்மத்தை விட பெரும்கூலி கிடைக்கும் தர்மம் எதுவுமில்லைநபிமொழி )அறிவிப்பாளர் அபூஹுரைரா (
                  இறைவிசுவாசிகளாகிய நாம், சொற்ப வாழ்வின் தண்ணீர்ப் பிரச்சனையை பெரிதாக்கி சொர்க்க வாழ்வின் தண்ணீர்ப் பிரச்சனையை மறந்து விடக்கூடாது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
நான் உங்களுக்கு முன்பே ('அல்கவ்ஸர்') தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னுடன் இருப்பதாகக் காட்டப்படுவார்கள். பின்னர் என்னிடமிருந்து அவர்கள் விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான் 'இறைவா! (இவர்கள்) என் தோழர்களாயிற்றே!' என்பேன். அப்போது 'இவர்கள் உங்களுக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது' எனக் கூறப்படும். 
இதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.