சனி, 20 பிப்ரவரி, 2016

உதாரணம் காட்டலுக்கு ஓர் உதாரணம்

بسم الله الرحمن الرحيم
உதாரணம் காட்டலுக்கு ஓர் உதாரணம்


ஆலிம்கள் கடலிலும், தரையிலும் வழி தெரிந்து கொள்ள இருளில் உதவும் நட்சத்திரங்களுக்கு ஒப்பாவர். நட்சத்திரங்கள் ஒளியிழந்து விடுமாயின் நடந்து செல்வோர் வழி தவறிவிடலாம்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல்: அஹ்மத்
சமீபத்தில் மறைந்த மாமேதை, ஷைகுல் ஹதீஸ், மவ்லானா, அல்ஹாஜ், சித்தீக் அலி ஹள்ரத் பாகவி, ஃபாஜில் தேவ்பந்த் ஹள்ரத் அவர்களின் மறைவு நம் யாவர்க்கும் துயரமான செய்தியாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் ஹள்ரத் அவர்களுக்கு மங்ஃபிரத் செய்து மண்ணறை வாழ்வையும் மறுமை வாழ்வையும் சிறப்பாக்கி "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் தங்க வைக்க போதுமானவன்.
ஹள்ரத் பெருந்தகை அவர்களிடம்  ஒரு மாணவராய் நான் கண்ட தனித்தன்மைகள்.
சிக்கலான விஷயத்தையும் உதாரணங்களின் மூலம் எளிதாக விளக்குல்.

அவற்றில் என் ஞாபகத்தில் உள்ள சில...

இறைவன் காலத்திற்கு அப்பாற்பட்டவன், நம்மீது காலம் கடக்கும் ஆனால் அல்லாஹ்வின் மீது காலம் கடக்காது என்பது கருத்து
உ-ம் ஆற்றோரம் நாம் இருக்கிறோம் என்று வைத்துக்கொண்டால் மீன்களின் மீது தண்ணீர் கடக்கிறது ஆனால் நம்மீது  தண்ணீர் கடப்பதில்லை என்பதைப்போல....

மறுமையில் ஈமான் இருந்தால்தான் அல்லாஹ்விடம் மதிப்பு ஈமான் இல்லாதவர்களை நரக குழியில் போட்டு விடுவான் என்பது கருத்து.

உ-ம் பிறக்கும் குழந்தைக்கு உயிர் இருக்கிறதா என்றுதான் முதலில் பார்ப்போம் உயிரில்லாமல் பிறந்த குழந்தைக்கு நம்மிடம் எந்த மதிப்பும் இல்லை குழி தோண்டி புதைத்து விடுவோமல்லவா...?

நல்லவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்று நாம் எல்லோரும் நம்புகிறோம்.

அது இப்போதே தயார் செய்ப்பட்டு விட்டதா அல்லது இனிமேல்தான் தயார் செய்யப்படுமா என்றொரு விவாதம் அகாயித் [கொள்கையியல்] நூல்களில் வரும்

அதில் சுன்னத் வல் ஜமாஅத்தினராகிய நம்முடைய கொள்கை சொர்க்கம் இப்பொழுதே உருவாக்கப்பட்டு, தயார் நிலையில் இருக்கிறது என்பதுதான். அதற்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் வரும் ஆதாரங்களை கூறிய பின் ஒரு உதாரணமும் கூறுவார்கள்.

சுவனம் என்பது நல்லவர்களுக்கான விருந்து
ஒருவரை வீட்டுக்கு வாருங்கள்,  சாப்பிட்டு வருவோம் என விருந்துக்கு அழைக்கிறோம் என்றால் உணவு தயார் நிலையில் இருந்து அழைப்பதுதான் பொருத்தமாகும் வாருங்கள் என்று அழைத்துச் சென்று பிறகு சமைப்பது பொருத்தமாகாது என்பதைப்போல சொர்க்கத்தின் பால் அழைத்துவிட்ட இறைவன் இனிமேல்தான் சொர்கத்தை படைப்பான் எனக்கூறுவது பொருத்தமாகாது.

ஒரு மனிதன் தான் மட்டும் நன்மை செய்பவனாக இருத்தல் போதாது மாறாக மற்றவர்களையும் நற்காரியத்தின் பால் தூண்டுபவனாக இருக்க வேண்டும் என்பது கருத்து.

உ-ம் அணைக்கட்டிலிருந்து வெளியேரும் தண்ணீர் தானும் இயங்கி வேறொன்றையும் இயக்குவதன் பலனாக மின்சாரம் தயாராகி அதன் மூலம் வெகுஜனங்கள் வெளிச்சம் பெருகின்றனர் இன்ன பல பலன்களை அடைகின்றனர்.
[இது பவானி சாகர் அணையில் வைத்து மாணவர்களிடம் சொன்ன படிப்பினைக்குறிய விஷயம்] 

Ø  அதட்டிக்கொள்ளாமல் பாடம் நடத்துதல்.
Ø  மாணவரக்ளிடம் வெளிப்படும் திறமைகளை பாராட்டி உற்சாகப்படுத்துதல்.
Ø  எளிய நடையில் மக்களுக்கு உபதேசம் செய்தல்
Ø  முன்வரிசையில் நின்று இமாம் ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றுதல்
Ø  நஃபிலான வணக்கங்களில் அதிக ஈடுபாடு கொள்ளுதல்
Ø  சிரமத்திலிருப்பவர் உதவி கேட்டு வந்தால் உதவுதல்
Ø  ஏழை எளிய மக்களுடனும் இனிதாக பழகுதல்
Ø  நகர் மற்றும் கிராமப்புறங்களில் முஸ்லிம் மஹல்லாக்களை உருவாக்கி இறையில்லம் பெருகிடவும் இஸ்லாமிய செழுமை உண்டாகவும் பாடுபடுதல்.
Ø  பல்வேறு மஹல்லா நிர்வாகிகளுக்கு நல்ல பல ஆலோசனைகள் வழங்குதல்.
Ø  புதிதாக இஸ்லாத்தில் இணைய விரும்பியவருக்கு ஆர்வமாக வழிகாட்டுதல்.

இத்தனை தனித்தன்மைகளை தன்னுள் கொண்டிருந்த ஹள்ரத் அவர்களின் மறைவு நம் தாவூதிய்யாவுக்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் ஏற்ப்பட்ட பேரிழப்பு என்றால் அது மிகையல்ல.
பணிவுடன்......

-          எஸ். முஹம்மது யூஸுப் தாவூதி, ஃபாஜில் ரஷாதி, வடகரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக